மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்...150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை..!
Heavy rain
கடந்த 2 நாட்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டுவதால் தென் மாவட்டங்கள் வெள்ளநீரில் மிதக்கின்றன். கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மட்டும் 93.2 செ.மீ மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்ததாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ. மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதனால் நெல்லை மாவட்டம் புதிய பேருந்து நிலையம், டவுன் வ.உ.சி தெரு, பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. நெல்லை மாவட்ட ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மழைநீர் சூழ்ந்ததால் புறநோயாளிகள் பாதிப்பிற்கு ஆளாகினர்.
இரண்டே நாளில் கொட்டுத்தீர்த்த மழையால் தாமிரபரணி ஆற்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 45,000 கன அடி நீர் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதேபோல் மணிமுத்தாறு, குற்றாலம் அருவிலக்ளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பியதால் விநாடிக்கு 30,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
ஆற்றுப்பகுதிகளில் அடித்து செல்லும் நீரால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பழையாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதேபோன்று இந்த வாரத்தின் தொடக்கத்தில் சென்னையை கடந்து சென்ற மிக்ஜாம் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 4ம் தேதி இரவும், அடுத்த நாளும் கொட்டித்தீர்த்த மழைக்கு சென்னை வெள்ளத்தில் மிதந்தது. ஒருவாரம் கடந்தும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். 2 நாட்களாக மழைநீர் தேங்கிய பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்தன.
அதேபோல் தற்போது தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்து வருகிறது. மழை முற்றிலுமாக நின்ற பிறகே வெள்ள பாதிப்புகள் தெரிய வரும். பருவமழை போன்ற இயற்கை பேரிடர்களை தடுகக் முடியாது. ஆனால், அவை வருமுன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.