கருகிய பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை !

விவசாய பாசனத்திற்கு ராஜா வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விட தாமதம் ஆனதால் தண்ணீரின்றி கருகும் பயிரால் வாவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம்,வெங்கரை,பொத்தனூர்,வேலூர்,இடையாறு,அனிச்சப்பாளையம்,பாலப்பட்டி,மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்காண ஏக்கரில் வெற்றிலை,வாழை,கரும்பு,கோரை,மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இங்கு பயிர் செய்துள்ள விவசாய பயிர்களுக்கு ஜேடர்பாளையம் காவிரி படுகை அனையில் இருந்து ராஜா வாய்காலில் மூலமாக திறந்து விடப்படப்படும் தண்ணீர் ராஜா வாய்க்கால்,கொமாரபாளையம் வாய்கால்,பொய்யேரி வாய்க்கால் மற்றும் மோகனூர் வாய்க்கால் மூலமாக பாசன வசதி பெருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் 3 ஆம் தேதி பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலை கோட்ட அதிகாரிகள் இப்பகுதி விவசாயிகளை அழைத்து பரமத்தி வேலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ராஜா வாய்க்காலில் வருடம் தோறும் நடைபெறும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ராஜா வாய்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் உறுதியளித்த காலத்திற்குள் தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் பயிர் செய்துள்ள வாழை,கரும்பு,கோரை,மரவள்ளி கிழங்கு. வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு விவசாயிகள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளதால் பயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story