ஈரோடு கிழக்கு தொகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைப்பு!!
Pongal gift hold
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை கொண்டா டும் வகையில் ஒரு முழுக்க ரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடந்தது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானிசாகர், அந்தியூர், பவானி, பெருந்துறை, கொடுமுடி என மாவட்ட முழுவதும் உள்ள 172 கூட்டுறவு சங்கத்தின் கீழ் 878 முழு நேர ரேசன் கடைகள், 355 பகுதிநேர கடைகள் என 1,233 ரேசன் கடைகளில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் முகாமில் உள்ள 1,379 குடும்பத்தினருக்கும் என மொத்தம் மாவட்ட முழுவதும் 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி நடந்து நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று முதல் வரும் 13-ந் தேதி வரை அந்தந்த ரேசன் கடைகளில் பொதுமக்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இன்று சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பவானி சாகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இன்று காலை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்க ப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த ரேஷன் கடைகளில் தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரி உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை பொங்கல் தொகுப்பு வாங்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.