நீலகிரிக்குள் நுழைய இன்று முதல் இ-பாஸ்
இ பாஸ்
நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீஸனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் 70 சதவீதம் பேர் சொந்த வாகனங்களில் வருகின்றனர்.
இதனால் ஊட்டி உள்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்தது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, இ- பாஸ் வர வலைத்தளம் முகவரி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் வழக்கமாக நீலகிரியில் கட்டுக்கடங்காமல் சுற்றுலா பயணிகள் கூட்டம் வரும். தற்போது இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் நீலகிரியில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. சுற்றுலாத் தலங்கள் காலை முதல் மதியம் வரை வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் வழக்கமான வாகனங்களை விட குறைவான வாகனங்களை சென்றன இதனால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது. படகு இல்லம் தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலாத்தலங்களில் குறைவான எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "சுற்றுலாத்தலமான நீலகிரியில் எந்த தொழில் வாய்ப்புகளும் கிடையாது. எனவே சுற்றுலா பயணிகள் வருகைதான் உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இ-பாஸ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விண்ண
ப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற நடைமுறை இருந்தாலும், ஒரு சிலருக்கு குழப்பம் ஏற்படுவதால் ஊட்டி வராமல் கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே இந்த நடைமுறைகளை தளர்த்த வேண்டும்," என்றனர். இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கூறுகையில், "இ- பாஸ் நடைமுறை மிகவும் தேவையான ஒன்றாகும்.
ஏனென்றால் கட்டுக்கடகாமல் வாகனங்கள் வருவதால், சுற்றுலா வருபவர்களுக்கும் சிரமமாக உள்ளது. உள்ளூர்வாசிகளுக்கும் அவதி ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
எனவே இ-பாஸ் நடைமுறை வைத்து விரிவான விவரங்கள் தயாரித்து அதன் பின்னர் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் வரலாம் என்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை வெளியிட்டு நீலகிரியை காப்பாற்ற வேண்டும்," என்றனர்.