இ-பாஸ் நடைமுறையை திரும்பப் பெற வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீலகிரி மாவட்ட கிளையின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் முகமது பாரூக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குலசேகரன் வரவேற்றார். கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வர விதிக்கப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை திரும்ப பெற வேண்டும்.
இ- பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான வணிகர்கள், சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சுற்றுலாவை மேம்படுத்த அரசு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்த வேண்டும். நவீன பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்த வேணடும். கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுபடுத்துவது ஏற்புடையதல்ல. கூடலூரில் யானைகள் வழித்தடம் பிரச்னையால் கூடலூரே இல்லாமல் போய்விடும். அங்கு மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும். பிளாஸ்டிக் பொருட்கள் தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு முறைப்படுத்த வேண்டும்.
பொருட்களை பேக்கேஜ் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக இ -பாஸ் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.