330 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என எடப்பாடி உறுதி...

1999-ல் மட்டும் திமுக-வுக்கு பாஜக தீண்டத்தக்க கட்சியாக இருந்ததா? எடப்பாடி பளிச்....

டெல்லியில் நடைபெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுகவை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு கவனம் பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்மும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை 26 கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. நேற்று நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இன்னொரு பக்கம் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 38 கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டன. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதையொட்டி கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக கூட்டணி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர் கூட்டம் நடைபெற்ற அசோக் ஓட்டலுக்கு பிரதமர் மோடி வந்தார். இதைத் தொடர்ந்து 38 கட்சி தலைவர்கள் சார்பாக பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது பிரதமருக்கு வலது பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி நெருக்கமாக இருந்தார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி எதிர்மறை எண்ணம் கொண்ட கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்று எதிர்க்கட்சிகளை சாடினார். தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது நேர்மறையான அரசியலை செய்ததாகவும், மக்கள் நலத்திட்டங்களுக்கு இடையூறு செய்யவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதன்பின்னர் நடத்தப்பட்ட கூட்டணி கட்சிகளின் புகைப்பட காட்சியிலும் பிரதமருக்கு அருகில் நெருக்கமாக காட்சியளித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தரப்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஏ.கே. மூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கிருஷ்ணசாமி, ஐ.ஜே.கே. சார்பாக பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ``உலக அளவில் இந்தியாவின் பெருமையை மோடி உயர்த்தியிருக்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படக்கூடிய அரசாக மத்திய அரசு இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளும் அதற்கு துணை நிற்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 330 இடங்களில் வெற்றிபெறும் என்று நம்புகிறோம். சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிய மரியாதை தேசிய ஜனநாயக கூட்டணியில் வழங்கப்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு தான் செயல்படுகிறது.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுக இருக்கும் சமயத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ. ராசா, கனிமொழி கைது செய்யப்பட்டார்கள். சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் சிறையில் இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஊழல் செய்வதே திராவிட முன்னேற்றக் கழகம் தான், அவர்களுக்கு அதிமுகவை குறைகூற அருகதை கிடையாது.

நான் முதல்வராக இருந்த போது கூட, என் துறை சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆர்.எஸ்.பாரதி என் மீது புகார் செய்தார். தி.மு.க-வை பொருத்தவரை வேண்டுமென்று திட்டமிட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எங்கள் மீது பொய் வழக்கு தொடர்கிறார்களே தவிர, அதில் உண்மை இல்லை. நீதிமன்றத்தில் நேற்று எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரவில்லை, உண்மையான தீர்ப்பு கிடைத்திருக்கிறது. தி.மு.க-வை ஓ.பி.எஸ் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார். கொடநாடு கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தது அ.தி.மு.க, நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியது அ.தி.மு.க, ஆனால் அவர்களுக்கு ஜாமீன்தார்களாக இருந்தது தி.மு.க. கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு.

எல்லா கட்சிகளுமே தேர்தலில் வெற்றி பெறுவது தான் நோக்கம். அப்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமையும். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தை பொருத்தவரை இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவது அதிமுக தான்.

இதே தி.மு.க தான் 1999-ல் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தது. அப்போது பா.ஜ.க தீண்டத்தக்க கட்சியாக இருந்ததா... அவர்களுக்கு அதிகாரம் வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுப்பார்கள், பச்சோந்தி மாதிரி அடிக்கடி நிறம் மாறி கொள்வார்கள். ஆனால், எங்கள் கொள்கையிலிருந்து எப்போதும் நாங்கள் தடம் மாற மாட்டோம். எங்கள் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் தி.மு.க-வில் இருக்கின்ற கூட்டணி கட்சிகள் அடிமைகளாக இருக்கின்றன" என்று கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story