''என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்".. ''கஸ்டோடியல் டெத்''விவகாரம்.. திடீர் சஸ்பென்ட்!

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.. கஸ்டோடியல் டெத்விவகாரம்.. திடீர் சஸ்பென்ட்!

ஏடிஎஸ்பி வெள்ளதுரை

திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி. மற்றும் ''என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்" என பெயர் பெற்ற ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2003-ம் ஆண்டு சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தவர், வெள்ளத்துரை.

இதனையடுத்து கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையிலும் உறுப்பினராக இருந்தார் வெள்ளதுரை. வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பி.யானவர் தனது 25 வருட சர்வீஸில் 12 என்கவுன்ட்டர்கள் நடத்தியவர்.

மதுரையில் எஸ்.ஐ.க்களைக் குத்திய ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்ததில் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயர் பெற்றவர் வெள்ளத்துரை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிறப்புப் படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார் வெள்ளதுரை. இதனிடையே ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை இன்று பணி ஒய்வுபெற இருந்தார். இந்நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு திருப்பாச்சேத்தியில் ராமு (26) என்கிற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெள்ளத்துரை மீதான என்கவுன்டர் வழக்கு சிபிசிஐடியில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உள்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பணியிடை நீக்கம் குறித்து வெள்ளத்துரை நீதிமன்றத்தை நாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story