சிறையிலும் எனது ஆன்மிக சொற்பொழிவு தொடரும்; ஜாமீன் தேவையில்லை: மகாவிஷ்ணு
Mahavishnu
சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாற்றிய திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவன தலைவர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது திருப்பூருக்கு அழைத்துச் சென்றும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மகாவிஷ்ணுவை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் சித்தர்களின் ஆலோசனையின்படியே நான் செயல்படுகிறேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சிறையிலும் எனது ஆன்மிக சொற்பொழிவு தொடரும் என்று தெரிவித்திருந்தார். இதன்படி புழல் சிறையில் உள்ள மகாவிஷ்ணு தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள சக கைதிகளுக்கு ஆன்மீக அறிவுரைகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறை வளாகத்தில் வைத்து தன்னுடன் உரையாடும் கைதிகளிடம் வாழ்க்கை முறை என்றால் என்ன என்பது பற்றியும், எதை யெல்லாம் செய்யக் கூடாது? என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் விளக்கமாக கூறி பாடம் நடத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் காவலில் எடுத்த போது, ஜாமீன் மனு போடுவதற்காக வந்திருந்த தனது வக்கீலிடம் ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் மகாவிஷ்ணு அதுபற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். அதே மனநிலையில்தான் தற்போதும் மகாவிஷ்ணு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எந்த சூழலிலும் ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யப் போவது இல்லை என்றும், எப்போது வெளியில் செல்ல முடிகிறதோ அப்போது போய் கொள்ளலாம் என்றும் கூறியுள்ள மகாவிஷ்ணு இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல்களை வெளியாகி உள்ளன.