முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா!

ஊட்டியில் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டியில் கட்டுமானப் பணிகளுக்காக பாறைகள் உடைக்கப்படுவதை தடுக்கக் கோரி முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள பல்வேறு கட்டுபாடுகள் உள்ளன. நிலச்சரிவு அபாயப் பகுதிகள் கட்டிடங்கள் கட்ட கூடாது, பாறைகளை உடைக்கக் கூடாது என நிபந்தனைகள் உள்ளன. ஊட்டி கோடப்பமந்து பகுதியில் தனியார் நிறுவனம் பிரமாண்ட குடியிருப்புகளை கட்டி வருகிறது. இந்நிலையில், கட்டுமானப்பணியின் போது பெரிய அளிலான பாறைகள் கண்டறியப்பட்டதால், அவற்றை அந்த நிறுவன ஊழியர்கள் உடைத்து வருகின்றனர்.

இதை வெளியே தெரியாமல் இருக்க பெரிய அளவிலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுமானப்பணிகள் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பினர் பாறைகள் உடைக்கப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் முன்னாள் செயலாளர் சுர்ஜித் கே.சவுதரி, அருண் பெள்ளி, ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் நேற்று பாறைகள் உடைத்த கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் நகர டிஎஸ்பி பி.யசோதா, ஆய்வாளர் முரளிதரன் மற்றும் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், பாறைகள் உடைக்கப்படும் இடத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது கட்டுமான நிறுவன ஊழியர்கள், போலீஸார் முன்னிலையிலேயே சுற்றுச்சூழல் அமைப்பினரிடம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் சமாதானம் செய்த போலீஸார், இது குறித்து காவல் நிலையம் புகார் அளிக்க அறிவுறுத்தினர். சுர்ஜித் கே.சவுத்ரி கூறுகையில், "நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் படி நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது. ஆனால், ஊட்டியில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் பிரமாண்ட கட்டுமானங்கள் நடந்து வருகின்றன. மேலும், ராட்சத பாறைகள் உடைக்கப்படுகின்றன. அதற்கு யார் அனுமதி அளித்தது. பாறைகள் ஜே.சி.பி., இயந்திரங்கள் கொண்டு உடைக்கப்படுகின்றன. சுற்றுச்சுவர் அனுமதிக்கப்பட்டுள்ள 10 அடிக்கு மேல் உயரமாக கட்டப்பட்டுள்ளது. மேலும், அனுமதி இல்லாமல் ஆழ்துளை அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறலுக்கு உடந்தையாக உள்ள அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என்றார்.

Tags

Next Story