வாய்க்காலில் மிதந்து வந்த எலும்புக்கூடால் பரபரப்பு... கைப்பற்றிய காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி  

பட்டுக்கோட்டை அருகே வாய்க்காலில் மிதந்து வந்த எலும்புக்கூடால் பரபரப்பு உண்டானது.
பட்டுக்கோட்டையில், கல்லணைக் கால்வாய் வாய்க்காலில் மிதந்து வந்த எலும்புக்கூடால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், பாளையம் பகுதி வழியாக கல்லணைக் கால்வாய் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் காலை மனித எலும்புக்கூடு ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் பாலசுப்பரமணியம், உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட காவல்துறையினர் அந்த இடத்தில் குவிந்தனர். பின்னர், அந்த எலும்பு கூட்டை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த எலும்பு கூடின் கழுத்து மற்றும் தலைப்பகுதி, தாடைப் பகுதி, கை மூட்டு பகுதி ஆகியவை இரும்பாலான ஸ்பிரிங் கம்பியால் இணைக்கப்பட்டு இருந்தது.

மேலும், பள்ளி அறிவியல் ஆய்வு கூடங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட எலும்புக்கூடு எனவும் தெரிய வந்தது. இந்த விவகாரம் பட்டுக்கோட்டை நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆற்றில் மிதந்து வந்தது மனித எலும்புக்கூடு அல்ல செயற்கையானது என தெரிந்தால், அது காமெடியாக மாறியது. இருப்பினும், காவல்துறையினர் அங்கிருந்து வெகு சிரத்தையாக எலும்புக்கூடை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இதை அடுத்து அப்பகுதியில் நிலவிய பரபரப்பு ஓய்ந்தது.

Next Story