சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு கட்டாய தமிழ்பாடத்திற்கு விலக்கு

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு கட்டாய தமிழ்பாடத்திற்கு விலக்கு

பொது தேர்வு 

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் மொழிப்பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

2023- 24 கல்வியாண்டிற்கு மட்டும் கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்களித்து பள்ளிகல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ன் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக எட்டாம் வகுப்பு வரை வெளி மாநிலங்களில் படித்துவிட்டு பெற்றோர்களின் பணி நிமித்தம் காரணமாக தமிழ்நாட்டிற்கு வந்து மாநில பாடத்திட்டத்தில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்திலிருந்து எழுதுவதில் விலக்கு அளிக்கப்பட்டது.

ஆறாம் வகுப்பு முதல் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் மொழி பாடத் தேர்வினை கட்டாயம் எழுத வேண்டும். குறிப்பாக தெலுங்கு மலையாளம் உருது ஆகிய சிறுபான்மை மொழியில் மாணவர்கள் அண்டை மாநில எல்லைப் பகுதியில் படித்து வருகின்றனர். தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிறுபான்மை மொழி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழிபாடத் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுபான்மை மொழியை விருப்ப பாடமாக எழுதும் மாணவர்களும் 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அந்த மதிப்பெண்களும் மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் அரசாணை வெளியிட்டுள்ளார், தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 பிரிவு 5-இல் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் 2024-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வெழுத உள்ள தமிழ்மொழி அல்லாத சிறுபான்மை மொழியினை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள், பகுதி I-இன் கீழ் கட்டாய தமிழ்மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்குக் கோரி விண்ணப்பிக்கும் தேர்வில், அந்த மாணவர்களுக்கு மட்டும், அவர்களது கோரிக்கையினை ஏற்று, ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி, 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கு மட்டும் கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்களித்து, அவர்களது சிறுபான்மை தாய்மொழிப் பாடத்தினை, பகுதி 1-இன் கீழ் தேர்வெழுத அனுமதி வழங்கலாம் எனவும். 2024-2025-ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை மொழி பள்ளிகளில் உள்ள அனைத்து தமிழாசிரியர் பணியிடங்களையும் நிரப்பிடும் பொருட்டு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story