மோடியின் விருப்பத்தை ஊடகங்கள் நிறைவேற்றியுள்ளது - முத்தரசன்
இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் 7- ஆவது கட்டத்தோடு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலில் மோடி மேற்கொண்ட பிரச்சாரங்கள் குறித்து பொதுமக்களிடம் கடும் விமர்சனம் உள்ளது. தமிழ்நாட்டில் வந்த போது ஒரு வித பிரச்சாரத்தையும், வடமாநிலங்களுக்கு சென்ற போது இந்து - முஸ்லீம் என வேறுபடுத்தியும், பின்னர் வடக்கு, தெற்கு என்று கூறினார். தொடர்ந்து குழந்தை ராமர் குடிசையில் இருந்தார் அவரை நாங்கள் கொண்டு வந்து கோபுரத்தில் வைத்துள்ளோம் என கூறினார்.
இது எதுவும் பயன்பெறாத நிலையில் தானே கடவுள் என கூறினார். பின்னர் அந்த பிரச்சாரமும் போதவில்லை என்பதால் நான் தியானம் மேற்கொள்கிறேன் எனக் கூறி குமரி முனையில் விவேகானந்தர் பாறையில் வந்து தியானம் செய்தார், தியானம் என்பது அமைதியாக நடைபெறவேண்டிய ஒன்று. ஆனால், டெல்லிலிருந்து வந்ததிலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவர் கோயிலில் வழிபடுவது, காவி உடை தரித்திருப்பது, உத்திராட்சம் உருட்டுவது என்று ஒவ்வொன்றையும் புகைப்படக்காரர்கள் மூலம் படம் பிடித்து அனைத்தும் வெளியானது. இதிலிருந்து தெரிகிறது இந்த தியானம் என்பது எவ்வளவு போலித்தனமானது, அவர் மக்களை ஏமாற்றுகிறார். வாரணாசி தேர்தலில் இது பயன்படும் என்ற நப்பாசையில் செயல்பட்டுள்ளார்.
பிரதமர் எத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்தார், எத்தனை பொது கூட்டங்களில் பேசினார் என்பதெல்லாம் சாதனையாக ஊடகங்கள் பேசுகிறது. ஆனால் இவ்வளது தூரம் பிரச்சாரம் செய்தவர், கடந்த 10 ஆண்டுகளில் நான் செய்த சாதனைகளை பற்றி பிரச்சாரம் செய்யவில்லை. 2014, 2019 ம் ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி எங்கும் பேசவில்லை. மாறாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் மத, சாதி ரீதியான பிரச்சினைகளை பேசியுள்ளார். இதுவரை இந்த நாட்டில் எந்த ஒரு பிரதமரும் இப்படிபட்ட கீழ்த்தரமான பேச்சுகளை பேசவில்லை. இவ்வளவு வெறித்தனத்துக்கு காரணம் என்னவென்றால் தோற்று போகிறோம் என்பதால்தான்.
தோல்வி உறுதியான நிலையில் இப்படிபட்ட கீழ்தரமான, அருவருக்க தக்க பேச்சுகளை மோடி பேசியுள்ளார். இந்த பிரச்சாரத்தின் மூலம் மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறோம். நிச்சயம் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பு என்பது, மோடி கூறியதை ஊடகங்கள் கூறியுள்ளது. மோடி 400 இடங்கள் என கூறினார் அதில் சில குறைந்துள்ளது, மோடியின் விருப்பத்தை ஊடகங்கள் நிறைவேற்றியுள்ளது. 4-ஆம் தேதிக்கு பிறது உண்மை என்னெவென்று தெரியும் அதுவரை பொறுத்திருப்போம்.
ஒருவேளை நாம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நம்முடைய பணிகளை தீவிரப்படுத்துவோம். காவிரி பிரச்சினைக்கு மழை பெய்தால் தான் தீர்வு, கர்நாடகத்தில் போதிய மழை இல்லை என கூறியுள்ளனர். தற்போது பருவமழை பெய்து வருகிறது. குறைந்தபட்சம் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தான் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இயற்கை நமக்கு ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் இருப்போம்" என்றார்.