அணைகளில் நீர்மட்டம் சரிவு - மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால் காட்டு குப்பை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் ஆகிய மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயாறு, அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்தி மந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய 13 அணைகள் உள்ளன.
குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், அவலாஞ்சி, காட்டுக் குப்பை என 6 மின்நிலையங்கள் உள்ளன. பைக்காரா மின் வட்டத்தில் முக்கூர்த்தி, பைக்காரா, சிங்காரா, மாயாறு, மரவகண்டி, பைக்காரா இறுதி நிலை புனல் மின் நிலையம் என 6 மின் நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 12 மின் நிலையங்களில் மொத்தம் 833.65 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு பருவ மழை பொய்த்த நிலையில், அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு எடுக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் உள்ள அணைகளில் 20 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது.
குந்தா வட்டத்தில் 184 அடிகொண்ட எமரால்டு அணை,171 அடி கொண்ட அவலாஞ்சி அணை, 210 அடி கொண்ட அப்பர்பவானி அணைகள் பெரிய அணைகளாகவும், மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படுகிறது. இந்த அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால், காட்டு குப்பை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் ஆகிய மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மீதமுள்ள மின்நிலையங்கள் மூலம் தினசரி 150 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய மூன்று மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் மின்சாரம் பிற மாவட்டங்களுக்கு பிரித்து விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் மின் உற்பத்தி படிப்படியாக குறைந்ததால், மின்சாரம் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.