காவிரி மேலாண்மை ஆணைய தீர்மான நகல்களை எரித்து போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நேற்று, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். போராட்டத்தில், கடந்த பிப்.1 ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் தீர்மானத்தை ஆணையம் நிறைவேற்றியுள்ளதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கர்நாடக அரசு சட்ட விரோதமாக மேகேதாட்டுவில் கட்டும் அணைக்கு மத்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பிப்.1ம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் தீர்மான நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பின் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகள் கூறியதாவது: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்து விட்டு, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த பிப்.1ம் தேதி ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டுவில் அணை கட்ட, கா்நாடகாவுக்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
தமிழக அரசு அதை தடுத்து நிறுத்த முன்வரவில்லை. கேமேதாட்டுவில் அணையை கட்டி தமிழகத்தை அழிக்கும் வகையில் சட்டவிரோதமாக காவிரி மேலாண்மை ஆணையமே தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். சட்டவிரோதமான தீர்மானத்தை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆதரித்தாக ஆணையத்தின் தலைவர் ஹல்தர் கூறியுள்ளார். சட்ட விரோதம் என்றால் அதற்கான ஆதாரத்தோடு ஆணையத்தில் முறையிடுங்கள் தீர்மானத்தை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்தின் பிரதிநிதியாக உள்ள தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா இந்த பொறுப்புக்கு தகுதியற்றவர். தமிழ்நாட்டின் உரிமை பறிபோக துணையாக கடந்த பிப்.1ம் தேதி ஆணையத்தில் செயல்பட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் சந்தீப் சக்சேனா அலட்சியமாக செயல்படுவதால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். 5 கோடி மக்களின் வாழ்வாதாரம், சுமார் 22 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறிக்கூடிய போராபத்து உள்ளது. காவிரியில் மட்டுமல்ல, அமராவதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேளரா அரசு அணைக்கட்டி வருகிறது. தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகள் அனைத்தும் பறிபோகிறது. இதனை கண்டித்து அனைத்து வரும் 25ம் தேதி கோவையில் அனைத்து விவசாய சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பழனிசாமி அரசு முல்லைபெரியார் அணையை தவிர்த்து கேளரா, தமிழகத்துக்கான நீர் ஆதார பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ள சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அந்த குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை கூட்டம் நடத்தப்பட்டவில்லை. எனவே, தமிழகத்தின் நீர்ஆதாரம் பறிபோக காரணம் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.