விவசாயி மகன் உரிமையியல் நீதிபதியாக தேர்வு
ஐயப்பன்
பேய்க்குளம் விவசாயி மகன் உரிமையியல் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் ஊராட்சியில் உள்ள தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன்- பரமேஸ்வரி தம்பதியர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஜெயச்சந்திரா என்ற மகளும் ஜெயராமகிருஷ்ணன், ஐயப்பன் (24) என்ற இரு மகன்களும் உள்ளனர். சிறு வயது முதல் அரசுப் பள்ளியில் பயின்ற ஐயப்பன். பிளஸ் 2 முடித்த பின்னர் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருட சட்டப் பிரிவு பயின்றார். சட்டம் பயின்று சொந்த ஊருக்கு திரும்பிய அவர் நெல்லையில் மூத்த வழக்குரைஞர் செல்வம் என்பவரிடம் ஜூனியர் ஆக சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்நாடு புதுச்சேரி பார் அசோசியேசன் மற்றும் மனிதநேயம் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தார். தமது குடும்ப வறுமை சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரவு பகலாக படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது சகோதரி ஜெயச்சந்திரா குருப் தேர்வில் பயின்று வெற்றி பெற்று தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் ஜெயராமகிருஷ்ணன் எம்எஸ்சி கணிதம் படித்துள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக தேர்வாகியுள்ள ஐயப்பனை, உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பேய்க்குளம் சுற்றுவட்டார பகுதி மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.
Next Story