விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து

விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து

விவேகானந்தர் மண்டபம் 

பகவதி அம்மன் கோவில் விழாவையொட்டி வரும் 24-ம் தேதி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இவற்றை தினமும் கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டுகளித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருவிழாவான வருகிற 24- ந்தேதி (நாளை மறுநாள்) மதியம் 1 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்காக ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த பரிவேட்டை திருவிழாவில் சுற்றுலா பயணிகள், விவேகானந்த கேந்திரா மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஊழியர்களும், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்று பகல் 12 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது என்று கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பழனி தெரிவித்துள்ளார். அன்றைய தினம் பகல் 12மணி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும் மூடப் படும் என்று விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் தெரிவித்திருக்கிறார்.


Tags

Next Story