ஒரு வாரத்தில் வெள்ள பாதிப்பு இழப்பீடு : கனிமொழி எம்.பி. தகவல்

மக்களின் குறைகளை கேட்ட கனிமொழி எம்பி
திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் 300 பேருக்கு நிவாரண உதவியாக அரிசி, பலசரக்கு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கினார்.
பின்னர், அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளன. பயிர்கள் சேதமடைந்துள்ளன. சேதம் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் கணக்கெடுக்க தொடங்கியுள்ளனர். ஒரு வாரத்துக்குள் கணக்கெடுக்கும் பணி முடிந்து உரிய நிவாரணம் வழங்கப்படும்.
சில இடங்களில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. நிறைய இடங்களில் தண்ணீர் வடிந்து வருகிறது. மழைநீர் வடிந்த உடன் முழுமையான அளவில் மின்சாரம் வழங்கப்படும். ஆத்தூர் போன்ற இடங்களில் துணை மின் நிலையமே நீரில் மூழ்கிவிட்டது. அதனை சரி செய்த பிறகு மின்சாரம் வழங்கப்படும். பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்களை பாதுகாப்பாக அழைத்து செல்வது பெரிய சவாலாக இருந்தது. முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு நிவாரண உதவி வழங்கப்பட்டது. கணக்கெடுப்பிற்கு பிறகு இழப்பீடு வழங்கப்படும். இன்னும் நிறைய மீட்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. தரைவழியாக போக முடியாத இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது. ஏரல் பகுதியில் மிகப் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. அங்கு சாலை வழியாக செல்ல முடியாததால் படகு மூலமும், மோட்டார் சைக்கிள் மூலமும் சென்று மக்களை சந்தித்தோம் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை என்று கூறியது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த கனிமொழி, முதலில் மத்திய அரசு நிதியை முறையாக கொடுத்தால் தான் வழங்க முடியும். நிதியை முழுமையாக வழங்கிவிட்டு அவர் பேசட்டும் என கூறினார். நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, கண்காணிப்பு பொறியாளர் முருகேஷ், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையாளர் கண்மணி, நகர திமுக செயலாளர் வாள் சுடலை, நகர துணை செயலாளர் மகராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 பேருக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி தனியார் மகாலில் நடந்தது நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். தி.மு.க துணை பொது செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு அரிசிபை, குடை, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் தொகுப்பை வழங்கினார்.
