ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - வீடுகளை சூழ்ந்த மழை நீர்

ஓடைகளில் வெள்ளப்பெருக்கு -   வீடுகளை சூழ்ந்த மழை நீர்
வீடுகளை  சூழ்ந்த மழை நீர் 

தென்தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விருதுநகர், தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வத்திராயிருப்பு, கூமாபட்டி,மம்சாபுரம், வன்னியம்பட்டி,மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்தது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதிக அளவு நீர் வெளியேறுவதன் காரணமாக ஓடை ஓரங்களில் உள்ள குடியிருப்புகள் மழை நீரால் சூழ்ந்துள்ளன குறிப்பாக முதலியார்பட்டி, கொளூர்பட்டி தெற்கு தெரு,சந்தியா கிணற்று தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீரால் மூழ்கியுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். ஓடைப்பகுதிகள் நீர்வரத்து பாதைகள் தூர்வாராததால் மழை நீருடன் கழிவு நீரும் வீட்டுக்குள் புகுந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்னும் தொடர் மழை இருக்கும் காரணத்தினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story