மலர் கண்காட்சி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டு தோறும் மே மாதத்தில் உலக புகழ்பெற்ற மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும். வழக்கமாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நடைபெறும் மலர் கண்காட்சி, இந்த ஆண்டு மே 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. 126-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குழந்தைகளை கவரும் வகையில் டிஸ்னி வேர்ல்ட், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நீலகிரி பாரம்பரிய மலைரயில் ஆகிய உருவங்களை சுமார் 2 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முயல், தேனி, பிரமிடு உள்பட பல்வேறு மலர் உருவங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. மேலும் மலர் மாடங்களில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்தாண்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக முதல் நாள் இரவு 7 மணிக்கு "லேசர் லைட் ஷோ" நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. லேசர் நிகழ்ச்சியில் ஊட்டியின் அடையாளமான நீலகிரி வரையாடு, தோடர் மக்களின் குடிசை வீடு மற்றும் படுகர் மக்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மலர்கண்காட்சி முதல் நாளில் 25,000 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு இ-பாஸ் நடைமுறை சிக்கல்கள், ஒரே நாளில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி போன்ற போட்டிகள் நடந்தது, கண்காட்சி கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட குறைந்தது. இதன்படி முதல் நாளில் அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுமார் 15,000, இரண்டாவது நாளான இன்று சுமார் 18,000 பேர் என 2 நாட்களில் 33,000 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.