கொடைக்கானல் வனப்பகுதிகளில் 8வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ
கொடைக்கானலில் பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் 8 வது நாளாக தொடர்ந்து காட்டுத் தீ எரிகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது,இதனால் மலைப்பகுதிகளில் உள்ள புற்கள், செடி கொடிகள்,முற்புதர் காய்ந்து இருப்பதால் அவ்வப்போது வருவாய் நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் தீ பற்றுவதும், அணைவதுமாக உள்ளது, இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூம்பாறை,கூக்கால் மன்னவனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் காட்டு தீ பற்றியது,
இதனை தொடர்ந்து இப்பகுதியில் இருந்து பரவிய காட்டு தீ கடந்த எட்டு நாட்களாக பூம்பாறை வனப்பகுதி மற்றும் மன்னவனூர் செல்லகூடிய சாலைகளின் இருபுறங்களிலும்,கூக்கால் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலைகளிலும் தீ பரவி பற்றியதுடன் கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது, இதனை தொடர்ந்து இரவு மற்றும் பகல் வேளையில் 10க்கும் மேற்பட்ட வெளியூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு,வனத்துறையினர் இணைந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்,
இருப்பினும் தீ தொடர்வதால் மாவட்ட நிர்வாகம் முயற்சியில் வன குழுவை சேர்ந்தவர்கள், நகராட்சி பணியாளர்கள்,ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் இணைந்து சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இன்று மேல்மலை கிராம பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர், இருப்பினும் தீ கட்டுக்குள் வராமல் பல்வேறு பகுதிகளில் பரவி தொடர்ந்து எரிந்து வருகிறது, இதனால் இந்தப் பகுதியில் உள்ள வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன, மேலும் அரிய வகை மரங்களும் எரிந்து சேதமடைந்துள்ளது, தொடர்ந்து தீ எரிவதால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகவும், சாம்பல் பறந்த நிலையிலும், சாம்பல் காடுகளாகவும் காட்சியளிக்கிறது,
மேலும் இந்த வழியே செல்லும் உள்ளூர் பொதுமக்கள் மேல் மலை கிராம சாலையை கடக்க பெரும் சிரமத்திற்கு உள்ளாகியும், அச்சத்துடன் கடந்து வருகின்றனர், தரைப்பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,இதனை மாவட்ட வனத்துறை கவனம் செலுத்தி குன்னூர் பகுதியில் ஹெலிகாப்டர் கொண்டு தீயை அணைத்தது போல் இந்த பகுதியில் காட்டு தீயை அணைக்க வேண்டும் என பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
மேல் மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் தீ தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பூம்பாறை,மன்னவனூர்,மலை கிராமங்களுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் கன ரக வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளதால்,காவல் துறையினர் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்,இதனால் மலைக்கிராமங்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர், இந்த தீக்கு காரணம் வனத்துறையினரின் அலட்சியமே என பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.