கடன் பெற்று தருவதாக பல லட்சம் மோசடி- விசிக நிர்வாகி சிறையில் அடைப்பு

சேலத்தில் மகளிர் சுய உதவிக் குழு கடன் பெற்று தருவதாக பல லட்சம் மோசடி செய்த விசிக பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி ( 43.). இவர் சேலம் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளராக இருந்து வருகிறார்.இவரும் ,மேலும் சிலரும் சேர்ந்து பெண்களிடம் சென்று மகளிர் சுய உதவிக் குழு அமைத்து கடன் பெற்று தருகிறோம் . இதற்கு ஒருவருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கிடைக்கும், அரசு மானியம் 50 சதவீதம் கிடைக்கும் என தெரிவித்து பலரிடம் ரூபாய் 20 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்திருந்தனர். இது தவிர காயத்ரி, தன்னை சமூக நலத்துறை அதிகாரி என்றும் அரசின் நலத்திட்டங்கள் பெற்றுத் தருகிறேன் என்று கூறியும் பல லட்சம் மோசடி செய்துள்ளதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரியிடம் பொதுமக்கள் பலர் புகார் செய்திருந்தனர்.இதன்மீது விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதன் பேரில் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.இந்த நிலையில் காயத்ரியுடன் பணம் வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக அவருடன் இருந்த லெனின் மற்றும் இளமாறன், சாவித்திரி ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.காயத்ரி கடந்த இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்து வந்தார். இவரை பிடிக்க காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர் . இதன் பேரில் தீவிர விசாரணை நடந்தது இந்த நிலையில் காயத்ரி சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.டவுன் உதவி கமிஷனர் வெங்கடேஷ். இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், சம்பங்கி உள்ளிட்ட10 போலீசார் கொண்ட தனிப்படையை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அமைத்தார். இவர்கள் காயத்ரியை தேடி கடந்த 3 நாட்களாக சென்னையில் முகாமிட்டு தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று சென்னையில் அசோக் நகரில் உள்ள ஓட்டலில் வைத்து காயத்ரியை அதிரடியாக கைது செய்தனர். அவரது கார் டிரைவர்கள் 2 பேருடன் பிடித்து தனிப்படையினர் சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து சொகுசு கார், மற்றும் நகைகளும் பறிமுதல் செய்யப் பட்டது.இவர்களிடம் தெற்கு சரக துணை கமிஷனர் மதிவாணன் விசாரணை நடத்தினார்.இன்று அதிகாலை காயத்ரி சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காயத்ரி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story