இலவச வீட்டு மனை பட்டாக்கள் : கனிமொழி எம்பி வழங்கல்

இலவச வீட்டு மனை பட்டாக்கள் : கனிமொழி எம்பி வழங்கல்

இலவச பட்டா வழங்கிய எம்பி

கோவில்பட்டியில் 16.80 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கனிமொழி எம்பி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 3161 பயனாளிகளுக்கு ரூ.16.80 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கனிமொழி எம்பி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் இன்று (09.03.2024) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய வட்டங்களை சேர்ந்த 352 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைபட்டாக்களையும், 62 இதர பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும்,

வீடுகட்டி குடியிருந்து வரும் 1091 பயனாளிகளுக்கு ஆக்கிரமிப்பினை வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டாக்களையும், ஆதிதிராவிடர் நலத்துறை நிலங்களில் வீடுகட்டி குடியிருந்து வரும் 1307 பயனாளிகளுக்கு "இ"பட்டாக்களையும், ஆதிதிராவிடர் நலத்துறை நிலங்களில் காலிமனைகளில் 349 பயனாளிகளுக்கு "இ" பட்டாக்களையும் ஆக மொத்தம் 3161 பயனாளிகளுக்கு ரூ.16.80 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் வழங்கினார்.

பின்னர் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் 1 இலட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டா வேண்டுமென்ற கோரிக்கை வைத்திருந்தவர்களுக்கு இன்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. வீடு என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒரு கனவு. உங்களுடைய கனவை இன்று நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி தந்திருக்கிறார்கள்.

கோவில்பட்டி தாலுகாவில் 1076, கயத்தார் தாலுகாவில் 610, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 557, விளாத்திகுளம் தாலுகாவில் 618, எட்டயபுரம் தாலுகாவில் 300 என மொத்தம் 3161 பேருக்கு இன்று இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த பட்ஜெட் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கனவு திட்டமான கலைஞர் கனவு இல்ல திட்டத்தினை அறிவித்தார்கள். இந்தியாவிலேயே முதன்முறையாக குடிசையில் இருப்பவர்களுக்கு மாடி வீடு கட்டி தரும் குடிசை மாற்று வாரியம் திட்டத்தினை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண் குழந்தைகளை படிக்க வைத்தால் திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார்கள். அந்த திட்டத்தின் நீட்சிதான் இன்று புதுமைப்பெண் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்தார். இன்று ஆண்கள் கல்லூரி படிக்க மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் தான் பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் நமது மாவட்டத்திற்கு வந்து வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் ரூ.16000 கோடி முதலீட்டில் வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிறுவனம்15 மாதங்களில் திறக்கப்பட உள்ளது. அந்த தொழிற்சாலையில் நமது மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோவில்பட்டியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். அதேபோல் கோவில்பட்டியில் மிகவும் பிரபலமான கடலைமிட்டாய் உலகம் முழுவதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

அதை வெளிநாடுகளில் விற்கும் அளவுக்கு விரிவுப்படுத்துவதற்காக இங்கு தனியாக மையத்தை உருவாக்கி தருவேன் என்று அறிவித்துள்ளார்கள். நமக்காக செயல்பட்டு கொண்டிருக்கும் ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி. பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1000 கிடைத்துக் கொண்டிருக்கிறது. வீட்டுமனைப் பட்டா வாங்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அழகான வீடு கட்டி மிக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார். அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி பட்டாக்களை கணினி மயமாக்கி கணினி பட்டா, வரன்முறைப்படுத்தப்பட்ட பட்டா, வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியவை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடைய கோரிக்கைகளையும், தேவைகளையும் அறிந்து பல்வேறு திட்டங்களை தருகின்றார்கள். கோவில்பட்டி தாலுகாவில் 1076, கயத்தார் தாலுகாவில் 610, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 557, விளாத்திகுளம் தாலுகாவில் 618, எட்டயபுரம் தாலுகாவில் 300 என மொத்தம் 3161 பேருக்கு இன்று இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் திருச்செந்தூர், திருவைகுண்டம், தூத்துக்குடி தாலுகாக்களிலும் வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 4774 பேருக்கு பட்டா இன்றும் நாளையும் வழங்கப்பட உள்ளது. அதேபோல் கோவில்பட்டி கோட்டத்தில் 352 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 62 இதர பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், வீடுகட்டி குடியிருந்து வரும் 1091 பயனாளிகளுக்கு ஆக்கிரமிப்பினை வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டாக்களையும், ஆதிதிராவிடர் நலத்துறை நிலங்களில் வீடுகட்டி குடியிருந்து வரும் 1307 பயனாளிகளுக்கு "

இ"பட்டாக்களையும், ஆதிதிராவிடர் நலத்துறை நிலங்களில் காலிமனைகளில் 349 பயனாளிகளுக்கு "இ" பட்டாக்களையும் ஆக மொத்த 3161 பயனாளிகளுக்கு ரூ.16,80,49,022/- கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் இன்று வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உயர்கல்வி படிக்க புதுமைப்பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளும் பயன்பெறலாம் என்று அறிவித்துள்ளார்கள். அதேபோல் அரசு பள்ளி மாணவர்களும் கல்லூரி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்கள். மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிய வீடு கட்டும் திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தினையும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கி வீடு கட்டி தரப்படும். மேலும் ஆதிதிராவிட மக்களுக்கான குடியிருப்புகளை புனரமைப்பு செய்யும் திட்டத்தினையும் அறிவித்துள்ளார்கள். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிக்கு திட்டங்களை பெற்று தருவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடியில் பர்னிச்சர் பார்க், கோவில்பட்டியில் தொழிற்பேட்டை பெற்று தந்துள்ளார்கள். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவும், தூத்துக்குடி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்றவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், வட்டாட்சியர்கள் சரவணப்பெருமாள் (கோவில்பட்டி), நாகராஜன் (கயத்தார்), ராமகிருஷ்ணன் (எட்டயபுரம்), ராமகிருஷ்ணன் (விளாத்திகுளம்), சுரேஷ் (ஓட்டப்பிடாரம்), உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story