இலவசம் .. ஓசி.. பிடிஆர் Vs அண்ணாமலை !
பிடிஆர் Vs அண்ணாமலை !
தமிழ்நாடு அரசின் மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்றான மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தை பல்வேறு மாநில அரசுகளும் தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது, "சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை அளித்துள்ளன. இதனால் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரித்துள்ளது." என்று கூறியிருந்தார்.
இதனை விமர்சித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " பத்தாண்டு காலமாக பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வந்தார்.
தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில் சில தொலைக்காட்சி ஊடகங்களில் நேர்காணல் அளித்து வருகிறார். விமர்சனப் பூர்வமாக கேள்வி எழுப்பாத நேர்காணலாகவே பெரும்பாலும் உள்ளன. தேர்தல் பிரச்சாரமாகவே இதை பயன்படுத்திக் கொள்கிறார்.
மெட்ரோ ரயிலில், ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாது என்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். ஒரு இடத்தில் மெட்ரோ சேவை மட்டுமே இருந்து பேருந்து சேவைகள் இல்லாமல் இருக்கிறதா? பஸ் சேவையானது மெட்ரோ ரயிலின் சேவையை பாதிக்கிறதா என்று பத்திரிக்கையாளர் கேட்டிருக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு, இன்னும் நிதி வழங்க ஒப்புதல் தராமல், மத்திய அமைச்சரவை பல ஆண்டுகளாக கிடப்பில் வைத்து உள்ளது. '' என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, '' இலவச பஸ் வெற்றிகரமான திட்டம் என்று கூறும் அமைச்சர் தியாகராஜன், அத்திட்டத்தை, 'ஓசி' என்று விமர்சித்த சக அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை. தி.மு.கவில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் மாறி மாறி பயனாளியை "இலவச சுமை" என்று இழிவுபடுத்துவது எங்கும் நடப்பதில்லை.
பால், மின்சாரக் கட்டணம் போன்ற இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது சேமிப்பு என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 6,000 பஸ்கள் இயக்கப்படாததால், பயணியருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் கொள்முதல் என்பது வெறும் அறிவிப்பாகவே உள்ளது.
அரசு பள்ளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான, ₹1000 கோடி டெண்டரில் தமிழக அரசின் ELCOT நிறுவனத்திற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏன் கேரளா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விளக்கமளிப்பாரா?" என்று விளாசியுள்ளார்.