குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடக்கம்
இந்த ஆண்டு கோடை விழாவையொட்டி புகழ்பெற்ற 126-வது மலர்க்கண்காட்சி, ரோஜா கண்காட்சி கடந்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இந்த ஆண்டு கோடை விழாவின் கடைசி நிகழ்ச்சியான 64-வது பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அருணா தொடங்கி வைத்தார். பழ கண்காட்சி வரும் (ஞாயிற்றுக்கிழமை) வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டத்தின் பழங்களின் வளங்களை பறைசாற்றும் விதமாகவும், உள்ளூர் பெருமையை விளக்கும் வகையிலும் பல்வேறு காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை துறை நிர்வாகம் சார்பில் புஜ்ஜி கார்ட்டூன் உருவம், தஞ்சாவூர் மாவட்டம் -தலையாட்டி பொம்மை, கன்னியாகுமரி- தேனீ, நாமக்கல்- டிராகன், கரூர்- அன்னப்பறவை, கடலூர் -கலங்கரை விளக்கம், மதுரை- மறவன் பட்டாம்பூச்சி, திருச்சி -பாண்டா கரடி, பெரம்பலூர் -இந்தியா கேட், கோவை மாவட்டம் சார்பில் ஒட்டகம் போன்ற உருவங்கள் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பழக் கண்காட்சியின் சிறப்பம்சமாக 15 அடி உயரம் 6 அடி அகலத்தில் சுமார் 1.75 டன் திராட்சை பழங்களைக் கொண்ட கிங்காங் குரங்கு உருவம் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக பல்வேறு வகையான பழங்களை கொண்டு டைனோசர், வாத்து, நத்தை மினியன்ஸ் ஆகிய உருவங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிம்ஸ் பூங்கா தொடங்கிய 150 ஆண்டுகள் ஆவதையொட்டி 150 வகை பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு, 150-ஐ குறிக்கும் வகையில் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 5.50 டன் பழங்களால் இந்த உருவங்கள் செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் "கோ ஆர்கானிக்" சேவ் எர்த்" போன்ற வாசகங்கள் எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வழக்கமாக பெரியவர்களுக்கு ரூ.80, பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது பழக் கண்காட்சிக்காக சிறப்பு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது. ..