எட்டயபுரம் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ஆட்டுச்சந்தை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும். நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க, விற்க வியாபாரிகள் வருவார்கள்.
வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும். ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறும். இந்தாண்டு பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. 16-ம் தேதி இறைச்சி விற்பனை அதிகமாக நடைபெறும். இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று மதியம் முதல் ஆட்டுச்சந்தை களை கட்டியது. தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக ஆட்டுச் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில் இன்று சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
தொடர் மழையினால் கடந்த 2 வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் பொங்கல் பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது. கறிக்காக வாங்கும் ஆடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டதாகவும், ரூ. 7 கோடி வரைக்கும் இந்த பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.