ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் - விளாத்திகுளம் வீரர் சாதனை

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் - விளாத்திகுளம் வீரர் சாதனை

சோலைராஜ் தர்மராஜ்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் விளாத்திகுளம் அருகே ஏ.குமராபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
விளாத்திகுளம் அருகே உள்ள ஏ.குமராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ்- ஈஸ்வரி தம்பதியினர். இவர்களது மகள் காயத்திரி ,மகன் சோலைராஜ் தர்மராஜ்(29).சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்ட சோலை ராஜ் கிரிக்கெட் கபடி என பல்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்தார் .பத்தாம் வகுப்பு வரை கரிசல்குளம் உயர்நிலைப் பள்ளியிலும், நாகலாபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் +1 மற்றும் +2 படித்து முடித்துவிட்டு நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். அப்போது ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டதால் படிப்பை நிறுத்திவிட்டு 2013 ல் ராணுவத்தில் சேர்ந்தார்.2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அவரது வலது காலில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது வலது காலில் பாதம் பகுதி ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டது. தொடர்ந்து மனம் தளராது ராணுவத்தில் பணியாற்றிய சோலை ராஜ் தர்மராஜ் நீளம் தாண்டுதல் விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கினார்.ரானுவத்தில் உடன் பணியாற்றியவர்கள் மற்றும் ராணுவத்தின் ஒத்துழைப்பால் நீளம் தாண்டுதல் போட்டியில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 2023 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் டி-64 போட்டியில் சோலைராஜ் தர்மராஜ் கலந்துகொண்டு 6.80 மீ நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். இது இந்தியாவிற்கு 25 வது தங்கப்பதக்கமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த ராணுவ வீரர் சோலைராஜ் தர்மராஜிற்கு ஏ.குமராபுரம் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தங்க பதக்கம் வென்ற சோலைராஜ் தர்மராஜிற்கு முத்துபிரியா என்ற மனைவியும் தட்சிகாஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளனர்.

Tags

Next Story