தூத்துக்குடியில் இருந்து கொண்டு சென்ற தங்க நகைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து  கொண்டு சென்ற தங்க நகைகள் பறிமுதல்
தங்க நகைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்த ரூ.18 கோடி வைர, தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி சாலையில் தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களை அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். தூத்துக்குடியில் இருந்து ஒரு கார் வந்தது. அந்த காரில் சோதனை செய்தபோது சில இரும்பு பெட்டிகள் அதில் இருந்தன. அவற்றை திறந்தபோது, கிலோ கணக்கில் தங்க நகைகளும், ஏராளமான வைர நகைகளும் இருந்தன. பின்னர் அந்த நகைகளுக்கான ஆவணங்கள் குறித்து, காரை ஓட்டி வந்த கிஷோர் குமார் என்பவரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் சில ஆவணங்களை காட்டியுள்ளார். ஆனால், அந்த ஆவணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்பதால், அதிகாரிகள் வைர, தங்க நகைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். பின்னர் நகைகள் இருந்த 3 பெட்டிகளையும், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சார்நிலை கருவூலத்துக்கு கொண்டு வந்து எடை போட்டனர். நகைகள் மட்டும் ஒட்டுமொத்தமாக 29 கிலோ 70 கிராம் எடையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.18 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த நகைகளுடன் பெட்டிகளுக்கு சீல் வைத்து கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அதிகாரிகள் கூறியதாவது: தூத்துக்குடியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு மதுரையிலும் கிளை உள்ளது. எனவே தூத்துக்குடியில் இருந்து மதுரை கிளைக்கு நகைகளை கொண்டும் வரும் வழியில் இந்த நகைகள் பிடிபட்டுள்ளன.

இதற்கான அனைத்து ஆவணங்களையும், காண்பித்தால், நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும். அந்த நகைகளை கொண்டு வந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மதுரையில் ரூ.18 கோடி தங்க, வைர நகைகள் வாகன சோதனையில் சிக்கிய விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags

Next Story