கோரக்குந்தா வனச் சரகத்தில் காட்டுத் தீ திணறும் வனத்துறை!
நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி வனக்கோட்டம், கூடலூர் வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம், முக்குருத்தி தேசிய பூங்கா உள்ளது. இதில் நீலகிரி வனக்கோட்டத்தில் ஊட்டி வடக்கு, ஊட்டி தெற்கு, கவர்னர்சோலை, பார்சன்ஸ் வேலி, நடுவட்டம், பைகாரா, குந்தா, கோரகுந்தா, கட்டப்பட்டு, குன்னூர், கோத்தகிரி, கீழ் கோத்தகிரி ஆகிய 12 வனச் சரகங்கள் உள்ளன.
நீலகிரி மற்றும் கேரள மாநில எல்லையை ஒட்டி உள்ள முக்குருத்தி தேசிய பூங்காவைவை ஒட்டி கோரகுந்தா வனச் சரகம் உள்ளது. இதில் அப்பர் பவானி அணை உள்ளிட்ட பல அதி முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. பல்வேறு வன உயிரினங்கள் அறிய தாவரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால் வனத்துறையினருடன் இணைந்து, தமிழ்நாடு அதிரடி படையினரும் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மனிதர்கள் நடமாட்டம் இந்த பகுதியில் மிகவும் குறைவாக இருக்கும். நீலகிரியில் 73 வருடங்களுக்கு பிறகு 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால் பல்வேறு இடங்களிலும் வனப்பகுதியில் செடி கொடிகள் கருகி காணப்படுகின்றன. கோரகுந்தா வனப்பகுதியிலும் வரலாறு காணாத வகையில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக வனப்பகுதியில் செடி, கொடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் காய்ந்தன.
இந்நிலையில் கோரகுந்தா வனப்பகுதியில் கடந்த 2 வாரமாக அவ்வப்போது காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மரங்கள் எரிந்து சாம்பல் ஆகின. இந்நிலையில் தற்போது மீண்டும் கடந்த 4 நாட்களாக கோரகுந்த வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதிலும் பல்வேறு மரங்கள் எரிந்து கறிக்கட்டையாகி விட்டன. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. வன விலங்குகளும் இடம்பெயர்ந்து செல்கின்றன. இந்த தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், தீயை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "வழக்கத்தைவிட இந்த ஆண்டு நீலகிரி அதிக வெப்பம் இருந்ததால் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. பல இடங்களில் காட்டுத் தீயை அணைத்துவிட்டோம் ஒரு சில இடங்களில் அணைக்க முடியவில்லை. தற்போது மழை தொடங்கியிருப்பதால், காட்டுத்தீயின் தாக்கம் குறைந்துள்ளது. கேரள வனப்பகுதியில் பரவிய காட்டுத்தி அந்த வழியாக கோரகுந்தா வனப் பகுதிக்கும் வந்து விட்டதால், பல ஏக்கர் வனப்பகுதி நாசமாகிவிட்டது,"என்றனர்.