தேசப்பற்று பற்றி பேச கவர்னருக்கு அருகதை இல்லை - துரை வைகோ

தேசப்பற்று பற்றி பேச கவர்னருக்கு அருகதை இல்லை -  துரை வைகோ

துரை வைகோ 

சேலம் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சேலம் ரெட்டிபட்டி பகுதியில் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் சி.சங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும். பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அந்த மாநில அரசுகள் செயல்படாத அளவில் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் அரசு கொண்டு வரும் மசோதாக்களை நிறுத்தி வைக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. சங்கரய்யா விடுதலை போராட்ட வீரர். அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே தேசப்பற்று, நாட்டுப்பற்று பற்றி பேச கவர்னருக்கு அருகதை இல்லை.

தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத நல்லாட்சி கொடுக்க போகிறோம் என்று அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், போலீசாரால் தேடப்படும் பல குண்டர்கள் பா. ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு அவர் என்ன நல்லாட்சி கொடுக்க போகிறார். அமலாக்கத்துறையில் கடுமையான சட்டங்கள் உள்ளன. இதனால் தான் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காலதாமதம். அவருக்கு இன்னும் ஒரு மாதத்தில் ஜாமீன் கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. அரசுக்கு,நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. அரசுக்கு, மத்திய அரசு நெருக்கடி கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானது தான். தமிழக அரசு அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றும். நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க, அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பூரண மதுவிலக்கு ம.தி.மு.க.வின் நிலைப்பாடு. கவர்னரை மாற்றக்கோரி ஏற்கனவே 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளோம். பாடபுத்தகங்களில் ராமாயணம், மகாபாரதத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது தவறு இல்லை. பைபிள், குரானையும் பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்.மதம் என்ற துருப்பு சீட்டை வாக்கு வங்கியாக பெருக்க பா.ஜனதா நினைக்கிறது. இது மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படும். மாற்றம் மக்களிடம் இருந்து வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் லிபியா சந்திரசேகர், மாநில கலைத்துறை துணை செயலாளர் பி.எஸ்.சுப்பிரமணியம், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் நடேசன், மாவட்ட செயலாளர்கள் மகேந்திரவர்மன் (மேற்கு), கோபால்ராஜ் (கிழக்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story