ஆளுநர் ரவி உடனடியாக பதவி விலக வேண்டும் - முத்தரசன்
செய்தியாளர் சந்திப்பு
ஒரு நபரை குற்றவாளி என தீர்ப்பளிப்பது நீதிமன்றம். வேறு யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. தமிழக அமைச்சராக இருந்த பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து விட்டது. உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கியவுடன் பொன்முடி தனது சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
அவருடைய தொகுதி காலியாக உள்ளதாக பேரவையில் அறிவிக்கப்பட்டது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் தொகுதி காலியாக இருந்தது என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. எனவே அவர் சட்டப்பேரவை உறுப்பினராக நீடித்து வருகிறார். இதனால் அவருக்கு அமைச்சர் ஆக கூடிய அனைத்து தகுதியும் இருக்கிறது என்பதால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் ரவி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் மீண்டும் பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். யார் அமைச்சராக இருக்க வேண்டும்.
யாருக்கு என்ன இலாகா ஒதுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் முழு அதிகாரம் முதல்வருக்கே உண்டு. பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற கடிதத்தை முதல்வர் அனுப்பிய நிலையில் ஆளுநர் காலதாமதம் செய்வதற்காக டெல்லி சென்றார். பின்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் ரவி எந்த கவலையும் படவில்லை. இன்று உச்சநீதிமன்றம் ஆளுநர் ரவி உடைய செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. நாளை வரை அவகாசம் கொடுத்துள்ளது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரை எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு ஆளுநர் ஆதரவாக இருக்க வேண்டும். குறிப்பாக மசோதாக்களுக்கு துணை நிற்க வேண்டும். ஆனால் இன்றுவரை 10 மசோதாக்கள் கிடப்பில் உள்ளது. பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும். இதை விடுத்து கிடப்பில் வைப்பது குறித்து நீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது. அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என அறிவுரையும் வழங்கி உள்ளது. இருப்பினும் ஆளுநர் இன்றுவரை தனது நிலைப்பாட்டில் இருந்து சிறிதும் மாறவில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஆளுநரின் செயல்பாடு இருந்து வருகிறது. நீதிமன்றம் ஏற்கனவே பலமுறை கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் ரவி சட்டத்தை மதிப்பவர் என்றால் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும். இனியும் அவர் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு, சட்டத்திற்கு புறம்பானது. அவர் பதவி விலக முன் வரவில்லை என்றால் குடியரசு தலைவர் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தமிழக ஆளுநரின் அராஜகமான செயல்பாடு குறித்து பட்டியலிட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துட்டு குடியரசு தலைவரை நேரில் பார்த்து விண்ணப்பம் அளித்து ஒரு ஆண்டு ஆகிறது. இதுவரை நடவடிக்கை குறித்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ஆளுநரை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. அவர் தமிழகம் முழுவதும் சென்ற இடங்களில் பல்வேறு அமைப்பு சார்பில் கருப்பு கொடி இயக்கங்களும் நடைபெற்று உள்ளது. ஆனாலும் எந்த வகையிலும் அவர் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. சட்டத்திற்கு புறம்பாக சாதாரண மனிதன் போல அவர் நடக்கக் கூடாது. ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாக, புறம்பாக, எதிராக செயல்படுகிற நிலையில் அவர் தொடரக் கூடாது. ராஜினாமா செய்ய வேண்டும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்த கேள்விக்கு அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை அதனால் அமலாக்கத்துறை தனது பணிகளை தொடர்ந்து செய்கிறது பாஜகவுக்கு அதிகாரப்பூர்வமான கூட்டணி என்பது அமலாக்க துறையும் வருமான வரி துறையும் தான்.
பாஜகவுக்கு பணியவில்லை என்றால் அமலாக்கத்துறை வருமானவரித்துறை சோதனை நடைபெறும். திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இவைகள் அனைத்தும் செயல்படுத்துவோம் என்பதுதான். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எதுவும் மாநில பிரச்சனையும் அல்ல. நடப்பது மாநில தேர்தலும் அல்ல. நீட் தேர்வு விலக்கு பெட்ரோல் டீசல் விலை குறைவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தும் ஒன்றிய அரசு தொடர்புடையது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
இது மிகவும் வரவேற்கத்தக்க சிறப்பான தேர்தல் அறிக்கை. இது கற்பனை அறிக்கை கிடையாது. நாட்டு மக்களின் பல்வேறு பிரச்சனைகளை பிரதிபலிக்கக் கூடிய வகையில் இருப்பதால் வரவேற்கத்தக்க அறிக்கை. எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கமான ஒன்று. பாஜக ஆட்சிக்கு வரும்போது வீட்டு உபயோக சிலிண்டர் 400 ரூபாயாக இருந்ததை தற்போது 1200 ரூபாயாக விலை உயர்த்தி தற்போது 100 ரூபாய் குறைக்கப்பட்டது நாடகம்.
இதேபோல் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த போது இதற்கு எண்ணெய் நிறுவனங்களே காரணம் என்று கூறிய மோடி அரசு, தேர்தல் நெருங்கியவுடன் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறுகிறது. இதுதான் நாடகம். யானை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே என்பதற்கு இணங்க சிலிண்டர் பெட்ரோல் டீசல் விலை உயர்த்திவிட்டு தற்போது குறைப்பது வேடிக்கையாக உள்ளது. ஒட்டகத்தின் முதுகில் அதிக பாரம் ஏற்றிவிட்டு ஒட்டகம் களைப்படையும் போது குண்டூசி அளவுக்கு பாரம் குறைப்பது போல் மோடி அரசு செயல்படுகிறது. மக்களை ஒட்டகம் போல் கருதுகிறது ஒன்றிய அரசு என்று தெரிவித்தார்