சட்டப்பேரவையில் இருந்து திடீரென வெளிநடப்பு செய்த ஆளுநர் - உள்ளே என்ன நடந்தது..?

Governor RN Ravi

 Governor RN Ravi

”தமிழக அரசின் உரையை வாசிப்பது அரசியலமைப்பு கேலிக்கூத்து” என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசின் முழு உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என். ரவி பாதியிலேயே வெளிநடப்பு செய்தது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 2வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதத்தில் இருந்து தள்ளிபோனது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றத்துடன், வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தள்ளிபோனது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேர்வை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 9.50 மணியளவில் தலைமைச் செயலகம் வந்துள்ளார். அவருக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதனையடுத்து ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு ஆளுநருக்கு அளிக்கப்பட்டது. சரியாக காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.

காலை 10.02 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்க தொடங்கினார். ஆங்கிலத்தில் இருக்கும் அந்த உரையானது சுமார் 40 நிமிடங்கள் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது. பொதுவாக சட்டப்பேரவை தொடரில் பேசப்படும் ஆளுநர் உரையில் சில முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்பதால் அவரது உரை முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் இன்றைய ஆளுநர் உரையிலும் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் அனைவருக்கும் வணக்கம் என தனது உரையை தொடங்கிய ஆளுநர், இந்த புத்தாண்டு கூடுதல் மகிழ்ச்சியையும், நல்வரவையும் கொண்டு வரட்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து” என்ற திருக்குறளை வாசித்தார். பின்னர், தனது தொடர் கோரிக்கை மற்றும் அறிவுரை என்பது தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றதுடன், ஒரு நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழ்நாடு அரசின் உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் தன்னால் ஏற்க முடியாது என்ற ஆளுநர் ஆர்.என். ரவி, “இந்த உரையை நான் வாசிப்பது அரசியலமைப்பு கேலிக்கூத்து. எனவே, இந்த பேரவையை பொறுத்தவரை, எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.. இந்த பேரவையில் மக்கள் நலனுக்காக பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வாழ்த்துகிறேன், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் நன்றி!” எனக் கூறி 2 நிமிடத்திலேயே தனது உரையை முடித்துக் கொண்டார்.

அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உரையை முழுமையாக படிக்காமல் அதை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்திருந்தார். அரசின் உரையை ஆளுநர் புறக்கணிக்கப்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை. ஆளுநர் தனது உரையை புறக்கணித்த நிலையில், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு படத்து முடித்தார். பின்னர், அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானத்தை அவை முனைவர் துரைமுருகன் முன்மொழிந்தார். தீர்மானத்தை அவர் படித்து கொண்டிருக்கும்போதே ஆளுநர் அவையில் இருந்து எழுந்து எழுந்து வெளிநடப்பு செய்தார்.

ஆளுநர் இல்லாமல் அரசு கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் வழக்கம் என்பதை உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என கூறி ஆளுநரின் நடவடிக்கைக்கு பதிலளித்தார்.

Tags

Next Story