நிவாரண பொருட்களை எடுத்த செல்ல அரசு பேருந்து - அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ,தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதி கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தடையின்றி போக்குவரத்து வசதி வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், திருச்செந்தூர் கோவிலில் கடந்த 3 நாட்களாக தங்கி இருந்தவர்கள் வீடு திரும்புவதற்கு ஏதுவாக கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர், திருநெல்வேலி பாதை, மழை வெள்ளத்தால் தடைபட்டுள்ளதால், பயணிகளை மாற்றுப்பாதையில் கன்னியாகுமரி வரை அழைத்து சென்று, பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் போது பேருந்து ஒன்று திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வந்தபோது பாலம் முழுமையாக மழை நீரால் மூழ்கியது. இதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களை மீட்க வேண்டும் என சொன்னதன் அடிப்படையில், அவர்களை மீட்கப்பட்டு அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து ஏற்பாடு செய்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். கனமழையின் போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மழை வெள்ளம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயிலில் இருந்த பயணிகளை மீட்டு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் அவர்கள் செல்லும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் வெள்ளநீர் வடிந்துள்ளதால் 95% பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நீர் படிப்படியாக வடிய துவங்கியுள்ளது. வெள்ள நீர் வடியும் பகுதிகளுக்கு ஏற்றார் போல் போக்குவரத்து சேவைகள் மீண்டும் துவக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அறிவுரையின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் பேருந்துகள் மூலம் இலவசமாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி போக்குவரத்து சேவையை முழுமையாக வழங்குவதில் போக்குவரத்துத்துறை பணியாளர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றார்கள். என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை உள்ளிட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.