தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Delhi Rain

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 17.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23.10.2024) காலை 05.30 மணி அளவில் புயலாக (டானா) வலுபெற்று, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் பாரதீப்பிற்கு (ஒரிசா) தென்கிழக்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு- தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 610 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி அதிகாலை வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். இது, வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24ஆம் தேதி இரவு 25ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், 23-ஆம் தேதி மாலை முதல் 24 ஆம் தேதி காலை வரை மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story