டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!!
Delhi Rain and Flood
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த இரண்டு வாரமாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. பின்னர் மீண்டும் நள்ளிரவில் மழை பெய்ய தொடங்கியது. இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து மழை கொட்டியது. இதே போல் வல்லம் ,திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடைமருதூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தன. தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கின. தொடர் மழையால் இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் பிரியங்காபங்கஜம் உத்தரவிட்டார். இந்த மழையால் பட்டுக்கோட்டை மணிகூண்டு, தலைமை தபால் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பேருந்து நிலையத்தில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இன்று காலையிலும் பட்டுக்கோட்டை பகுதியில் மழை பெய்து வருகிறது. இதைப்போல் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், மாங்குடி, வடகரை, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், மன்னார்குடி, வலங்கைமான், கொரடாச்சேரி, சேந்தமங்கலம், வண்டாம் பாலை, தண்டலை, புலிவலம், வாழவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று காலை முதல் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 31.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் மட்டும் 9.9 சென்டிமீட்டரும், குறைந்தபட்சமாக குடவாசலில் 1 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதே போன்று திருவாரூரில் 3.9, நன்னிலத்தில் 3.1, வலங்கைமானில் 3, நீடாமங்கலத்தில் 2.4 சென்டிமீட்டர் என மழை அளவு பதிவாகியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை வாய்மேடு, ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. மேலும் மழைநீர் தேங்கிய இடங்களில் கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கன மழையால் வேதாரண்யம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 10,000 ஹெக்டர் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மழையென விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.