கனமழை எச்சரிக்கை எதிரொலி : தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
கடந்த டிசம்பா் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், இம்மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும், சனிக்கிழமை (மே 18) மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, மழை வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தூத்துக்குடியின் முக்கிய மழைநீா் வடிகாலான பக்கிள் ஓடையில் 10 இடங்களில் தூா்வாரும் பணி தீவிரமாக நடபெற்று வருகிறது. இதில், கருத்தபாலம் பகுதியில் நடைபெற்ற பணிகளை ஆட்சியா் கோ. லட்சுமிபதி பாா்வையிட்டாா். மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் லி. மதுபாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அதைத்தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மேயா் கூறுகையில், பக்கிள் ஓடையில் 10 இடங்களில் தூா்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. மிக கனமழை பெய்தாலும் தண்ணீா் தேங்காமல் கடலுக்குச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றாா்.