கனரக வாகன டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15 சதவீதம் உயர்வு..!

இயற்கை ரப்பர் விலை உயர்வால், தமிழகத்தில் லாரி டயர் ரீட்ரேடிங் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தி ரீட்ரேடிங் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து மாவட்ட டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜ்குமார், நாமக்கல் மாவட்ட தலைவர் வரதராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,கடந்த சில ஆண்டுகளாக, மோட்டார் டிரான்ஸ்போர்ட் தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதால், கனரக வாகனங்களில் எண்ணிக்கையும், ஓட்டமும் குறைந்துள்ளது, தொழிலில் மந்தமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் மத்திய அரசு அதிக பாரம் (ஓவர்லோடு பர்மிட்) ஏற்ற அனுமதி அளித்துள்ளதால், லாரி உரிமையாளர்கள் டயர்களை ரீட்ரேடிங் செய்து உபயோகிப்பது குறைந்து, ரீட்ரேடிங் தொழில் நலிவடைந்து வருகிறது.

தமிழகத்தில் பல ரீட்ரேடிங் தொழிற்கூடங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ரீட்ரேடிங் தொழிலுக்கு தேவையான இயற்கை ரப்பர் மற்றும் மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக டயர் ரீட்ரேடிங் கட்டணத்தை 15 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்து அறிவித்துள்ளோம். இதை தமிழகம் முழுவதும் உள்ள டயர் ரீட்ரேடிங் நிறுவனங்கள் உடனடியாக அமல்படுத்தியுள்ளனர். தொழிலை காப்பாற்ற வேறு வழி இல்லாமல் செயல்படுத்தப்பட்டுள்ள, டயர் ரீட்ரேடிங் கட்டணம் உயர்வுக்கு லாரி மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story