கன்னியாகுமரியில் இருந்து அயோத்திக்கு செல்லும் புனித நீர்
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான கன்னியாகுமரியில் இருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட்டது.
அயோத்தி ராமஜென்ம பூமியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவில் கும்பாபிஷேகத்துக்காக குமரி மாவட்ட விசுவஇந்து பரிசத் சார்பில் கன்னியாகுமாரி திருவேணி சங்கத்தில் இருந்து புனித நீர் கலசங்களில் எடுக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
குமரி மாவட்ட விசுவ இந்து பரிசத் தலைவர் குமரேசதாஸ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா, காணி மடம் யோகிராம் சுரத்குமார் மந்திராலய நிறுவனர் பொன். காமராஜ் சுவாமிகள், தயானந்த சுவாமி ஆசிரமத்தின் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா, முத்துசாமி ஜி ஆகியோர் முக்கடல் சங்கத்தில் இருந்து ஐந்து கலசங்களில் புனித நீர் எடுத்து செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
இந்த புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சியை எம் ஆர் காந்தி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருவேணி சங்கத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட இந்த புனித நீர் தாங்கிய கலசங்களை பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அதன்பிறகு இந்த புனித நீர் தாங்கிய ஐந்து கலசங்களும் அயோத்தி ராமஜென்ம பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.