அரசு பள்ளி சமையலறை சுவற்றில் மனித கழிவு - சமூக விரோதிகள் அட்டூழியம்
அதிகாரிகள் விசாரணை
மேட்டூரையடுத்த கொளத்தூர் அருகே காவேரிபுரத்தில 1958 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தற்பொழுது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில் 136 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளியிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து பள்ளியின் சமையலறை கூடத்திற்கு சென்று பார்த்த போது, சமையலறை கூடத்தின் சுவற்றில் மனிதக் கழிவுகளை பூசி சமூக விரோதிகள் அட்டூழியம் செய்துள்ளனர். இது குறித்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சொர்ணலதாவிற்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் மதிய உணவு இப்பள்ளியில் தயார் செய்யாமல் அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் உணவு தயார் செய்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் கோட்டாசிய தணிகாசலம், வட்டாட்சியர் விஜி, காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இதனை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தன்மையில் செல்வி கொளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சமூக விரோதிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது குடித்தல், கஞ்சா புகைத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பள்ளிக்கு இணையாக உள்கட்டமை வசதிகளை மேம்படுத்தி, இரவு நேர காவலாளிகளை நியமித்து, பள்ளிகள் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றனர். மேலும் பள்ளியின் சமையலறை கூடத்தின் சுவற்றில் மனித மலத்தை பூசி சென்ற சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.