மரித்துப் போகாத மனிதநேயம்- குப்பையில் கிடந்த முதியவரை மீட்ட போலீஸ்

கோழிக்கழிவுகளுக்கு மத்தியில், ஆதரவற்ற நிலையில் கிடந்த முதியவரை போலீசார் மீட்டு, தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றும் ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகிய மூவரும், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பாலத்தின் அடியில், கொட்டப்பட்ட குப்பை,கோழி கழிவுகளில் யாரோ அசைவது போல தெரிந்துள்ளது. இதையடுத்து மூவரும் சென்று போது, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் குப்பைகள், கோழிவுகள் மத்தியில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அந்த முதியவரை மீட்டு, அவரை குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்த போலீசார், முதியவருக்கு உணவு வழங்கி தேவையான மருத்துவ முதலுதவி சிகிச்சையை அப்பகுதியில் உள்ள டாக்டர்கள் மூலம் அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வைத்தனர். தற்போது அந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனிதாபிமானம் இன்னும் மரித்து போகவில்லை என்பதற்கு சாட்சியாக, போலீசார் செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டியுள்ளனர். மேலும், போலீசாரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Tags

Next Story