அனைவருக்கும் மேலானவன் நான்- இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா பாடல் மீது உரிமை உள்ளதாக எக்கோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது எனவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார், இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதால், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில் அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா தன்னை நினைத்து கொள்கிறார் என்று எக்கோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்தது. இசையமைப்பாளர்கள் திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விடுவார்கள் என்று எக்கோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் எனவும் ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தை தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் எக்கோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நான் அனைவருக்கும் மேலானவன் தான் என இளையராஜா தரப்பு தெரிவித்துள்ள நிலையில், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.