நானும் ஒரு இந்து தான், அரசியல் என்பது மதங்களை தவிர்த்தது - துரை வைகோ

நானும் ஒரு இந்து தான், அரசியல் என்பது மதங்களை தவிர்த்தது - துரை வைகோ

துரை வைகோ

நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதமாக தான் இருக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்தார்.

மதுரையில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். ம

துரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்த கேள்விக்கு: இதைத்தான் நாங்கள் தேர்தல் களத்திலே கூறினோம். முதல்வரின் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டதை மக்களிடம் எங்களால் காண முடிந்தது. அதனால் தான் 39 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தோம். அதைத்தான் கருத்துக்கணிப்பும் தெரிவித்துள்ளது. ஆனால் மத்தியில் பாஜக கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வந்துள்ளது. ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது. அப்போது தெரிந்துவிடும் அதன் பிறகு கருத்து கூறினால் சரியாக இருக்கும்.

திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள் என்று இபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு: எதிர்க்கட்சித் தலைவராக ஆளுங்கட்சி மீது கருத்துக்களை கூறுகிறார். போதைப் பொருட்களாக இருக்கட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக இருக்கட்டும் இவை அனைத்தும் அதிமுக ஆட்சியிலும் நடைபெற்றது. தற்போது எதிர்க்கட்சி என்பதால் அவர் குற்றம்சாட்டுகிறார் அதை பொருட்படுத்த வேண்டாம் என்பது எனது கருத்து.

மதிமுக மதுவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் தற்போதைய நிலை குறித்து கேள்விக்கு: தமிழ்நாட்டில் மது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் தலைவர் வைகோவின் கருத்து. எங்களுக்கு அதில் எந்தவித சமரசம் கிடையாது. படிப்படியாக மதுவை குறைத்து மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.

யூட்யூபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு: சமூக ஊடகங்களுக்கு சென்சார் போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. அதில் சில வரம்புகள் தாண்டும் போது, யூகங்கள் அடிப்படையில் தவறான செய்திகள் பரப்பப்படும் போது தனிப்பட்ட நபரையோ அவரது குடும்பத்தையோ பாதிக்கிறது. பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு சென்சார்சிப் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளது. சமூக ஊடகங்களில் எளிய மக்களால் பெரிய தவறுகளை கூட வெளியில் கொண்டுவர முடிகிறது. ஆனால் ஒரு தனிப்பட்ட மனிதரையோ அல்லது இயக்கத்தையோ தவறான கருத்துக்களை பரப்புவதற்கு வரைமுறை இருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ஆனால் சவுக்கு சங்கர் குறித்து தனிப்பட்ட முறையில் பேச நான் விரும்பவில்லை.

சமூக ஊடகங்கள் மூலம் கட்டப்பஞ்சாயத்துகள் நடைபெறுவது குறித்த கேள்விக்கு: மஞ்சள் பத்திரிக்கை என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் ஒரு சில கருப்பாடுகள் அதில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள்தான் அடுத்தவர்களை மிரட்டி காரியம் சாதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் ஆனால் எல்லா இடங்களிலும் கருப்பாடுகள் இருக்கத்தான் செய்கிறார்கள். மக்கள் அதை புரிந்து கொண்டு அதை தவிர்ப்பது தான் நல்லது.

அயோத்தி ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டதால் பாஜகவிற்கு ஓட்டு சதவீதம் அதிகரிக்குமா என்ற கேள்விக்கு: தேர்தல் களத்திலோ அல்லது அரசியலிலோ விவாதம் என்பது மக்களை சார்ந்த விஷயமாக இருக்க வேண்டும். வேலை வாய்ப்பின்மை, கல்வி, மருத்துவம் போன்ற விஷயங்களை வைத்து மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தேர்தலை பொருத்தவரை மத்திய அரசு 10 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதைக் குறித்து பேச வேண்டும், மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். ஆனால் இதைப் பற்றி பேசாமல் மதத்தைப் பற்றியோ, ஜாதியைப் பற்றியோ பிரிவினை உண்டாக்கக்கூடிய பேச்சுகள்தான் இருந்தது. நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும். முடிவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது. இந்தியா கூட்டணி எங்களுடைய விவாதங்களை முன் வைத்தோம், பாஜக அவர்கள் விவாதத்தை முன் வைத்தார்கள் மக்களின் முடிவு என்பது தேர்தலுக்குப் பிறகுதான் சொல்ல முடியும்.

Tags

Next Story