ஏழை மக்களுக்கு அபராதம் விதித்தது தான் மோடியின் சாதனை -கி.வீரமணி

ஏழை மக்களுக்கு அபராதம் விதித்தது தான் மோடியின் சாதனை -கி.வீரமணி

தேர்தல் பிரசாரம் 

ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என பிரதமர் மோடி கூறினார். அதற்கு பதிலாக ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் இருப்பு குறைவாக இருப்பதாகக் கூறி ரூ.21 ஆயிரம் கோடியை அபராதமாக விதித்து வசூலித்தார். இதுதான் மோடி ஆட்சியின் சாதனை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் புதன்கிழமை மாலை திமுக வேட்பாளர் ச.முரசொலியின் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து அவர் பேசியது: இத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அடுத்து தேர்தலே நடைபெறாது. எனவே, இதைச் சாதாரண தேர்தலாகக் கருதாமல் லட்சியத் தேர்தலாக மக்கள் கருத வேண்டும். வரும் தலைமுறையினரின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என பிரதமர் மோடி கூறினார். அதற்கு பதிலாக ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் இருப்பு குறைவாக இருப்பதாகக் கூறி ரூ.21 ஆயிரம் கோடியை அபராதமாக விதித்து வசூலித்தார். இதுதான் மோடி ஆட்சியின் சாதனை.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு விலக்கு, சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த திட்டங்கள் உள்ளன. ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் சமூக நீதியே இல்லை. எனவே, சமூக நீதியை நிலை நாட்டுவதற்கும், குழி தோண்டி புதைப்பதற்கும் இடையே இத்தேர்தல் நடைபெறுகிறது. ஊழலை ஒழிப்போம் எனக் கூறும் பாஜகவினரே தேர்தல் பத்திர முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக தாங்கள் செய்த சாதனையைக் கேட்டு வாக்கு சேகரிக்கிறது. பாஜகவினரால் அப்படி எதுவும் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. எனவே, இத்தேர்தலில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொறுப்பு அரசியல் தரும் பிரதமரை மக்கள் தேர்ந்தெடுக்கவுள்ளனர்" என்றார் கி.வீரமணி. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் முத்து.உத்திராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story