அரக்கோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு: கணவனுக்கு கையில் வெட்டு

அரக்கோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு: கணவனுக்கு கையில் வெட்டு

சிசிடிவி காட்சி

அரக்கோணத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தடுத்த கணவனுக்கு கையில் வெட்டு விழுந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஜோதி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தனஞ்செழியன் (42). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறர். இவரது மனைவி ரூபா (38). இவர்கள் இருவரும் திருத்தணியில் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு பேருந்தில் அரக்கோணம் தாலுகா பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ரூபா கால் வலியால் மெதுவாக நடந்து செல்ல மனைவிக்கு முன்பாக 10 அடி தொலைவில் தனஞ்செழியன் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் முகத்தில் கர்சிப் கட்டிக் கொண்டிருந்த கொள்ளையன் திடீரென ரூபா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் செயினை பறிக்க முயன்றான்.

அப்போது செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டு திருடன் திருடன் என ரூபா கூச்சலிட்டார். இதைத்தொடர்ந்து கொள்ளையன் இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்லும்போது முன்னால் சென்று கொண்டிருந்த கணவன் தனஞ்செழியன் கொள்ளையனின் சட்டையை பிடித்து இழுக்க முயன்றார்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனஞ்செழியனை வெட்ட முயன்ற போது அவர் கத்தியை கெட்டியாக பிடித்துள்ளார். கத்தியை கொள்ளையன் இழுத்ததில் தனஞ்செழியனின் கை விரல்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து அரக்கோணத்தில் இது போன்ற கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்..

Tags

Read MoreRead Less
Next Story