அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய  இடங்களில்  வருமான வரித்துறை சோதனை

மருத்துவ கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை 

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இரண்டு இடங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 3-ந்தேதி வருமானவரி சோதனை நடைபெற்றது.இந்த சோதனை தொடர்ச்சியாக 5 நாட்கள் வரை நீடித்தது. இந்த சோதனையின் போது எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் அங்குலம் அங்குலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.கல்லூரி வளாகத்தில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது

எ.வ.வேலுவுக்கு நெருக்கமான தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.திருவண்ணாமலை அருணை கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 3 அறைகளை பூட்டி வருமானவரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் அப்போது ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 80 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவ கல்லூரி மற்றும் செங்கல்பட்டு குன்னத்தூர் ஆகிய 2 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.அருணை மருத்துவ கல்லூரியில் கடந்த முறை சோதனை நடத்தியபோது சீல் வைக்கப்பட்ட 3 அறைகளிலும் சீலை அகற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது அறையில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்டவை மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

இன்று காலை 11 மணி அளவில் 6 வருமானவரி துறை அதிகாரிகள் தனித்தனியாக 3 கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் அருணை கல்லூரியில் மீண்டும் சோதனை நடத்தியதுடன் சீல் வைக்கப்பட்ட அறையிலும் ஆய்வு செய்தனர்.இந்த சோதனையின் போது அருணை கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 20 வீரர்கள் வருமான வரி சோதனையின் போது கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.சோதனை நடைபெற்ற 3 அறைகள் முன்பும் மத்திய படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

செங்கல்பட்டு குன்னத்தூரில் ராஜ பிரகாஷ் என்கிற ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் ஒருவர் குன்னத்தூர் பகுதியில் 35 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் வாங்கியதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாகவே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 2 வாரங்களே ஆன நிலையில் மீண்டும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story