ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு: இபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலை கண்டனம்

ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு: இபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலை கண்டனம்

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்குரைஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர் கெட்ட திமுக ஆட்சியில் ஏற்கெனவே போதைப் புழக்கமும் அது சார்ந்த குற்றங்களும் சர்வசாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாசாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழகத்தில் இருந்து நியாயவிலைக் கடை அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் திமுக ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. வழக்குரைஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை: கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்குரைஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவைச் 'சேர்ந்த நபர், கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு ஒன்றில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம்: மணல் கொள்ளை, போதைப் பொருள் கடத்தலைத் தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. அரிசி கடத்தலுக்கு திமுகவினர் துணை போவது தெரியவந்துள்ளது.தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக விளங்க வேண்டும் என்றால், அரிசி கடத்தலில் ஈடுபட்டு, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் திமுகவினரை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story