I.N.D.I.A., கூட்டணி நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது: பழனிச்சாமி

கூட்டத்தில் பேசும் எடப்பாடி பழனிச்சாமி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி-வேலூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கான பயிற்சிப் பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் குமாரபாளையம் அருகே (8.2.2024) நடைபெற்றது.
கட்சியின் அமைப்பு செயலாளர்/ முன்னாள் அமைச்சர்/குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பி. தங்கமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்/ கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளர் டாக்டர் வெ. சரோஜா, சட்டமன்ற உறுப்பினர் S. சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், கடந்த கால அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றையும், கட்சிக்கு எதிராக திமுக வெளியிட்டு வரும் தகவல்களுக்கு உரிய முறையில் விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், சிறப்புரையாற்றிப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர்/ முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பேசும்போது, நாமக்கல் மாவட்டம் அதிமுக கோட்டை என்பதை வரும் மக்களவைத் தேர்தலில் நிரூபிக்க அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில்,
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு சாலை திட்டங்கள், மேம்பாலங்கள், மருத்துவக் கல்லூரி சட்டக் கல்லூரி அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அதிமுக ஆட்சி காலத்தில் தான் அறிவிக்கப்பட்டது.
இதுபோன்ற அதிமுக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு திமுக அரசு தனது திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. தமிழகத்தில் ஊடகங்களும் பத்திரிகைகளும் உண்மைச் செய்திகளை வெளியிட்டால், இந்த திமுக ஆட்சி அத்தோடு முடிந்து விடும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சி, விடியா திமுக அரசின் மக்கள் படும் துன்பங்கள், திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு பிரச்னைகள் ஆகியவற்றை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், பொதுமக்களிடையே வலைதளம் வழியாக கொண்டு சேர்ப்பது தலையாய கடமையாகும்.
இன்றைய ஆட்சியாளர்கள் பணத்தை நம்பி ஆட்சி செய்து கொண்டு, மக்களவைத் தேர்தலை சந்திக்க நினைக்கின்றனர். பணத்தை கொடுத்து வாக்கு பெற்றுவிடலாம் என பகல் கனவு காண்கின்றனர். அதிமுகவை பொறுத்த வரை, ஜனநாயக வழியில் மட்டுமே தேர்தல்களை சந்திக்கிறது. திமுக குடும்ப, வாரிசு அரசியல் நடத்தி, குடும்பக் கட்சியாகவும் உள்ளது.
அக்கட்சியின் மூத்த மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக உதயநிதியை ஆதரிக்கின்றனர். ஆனால் அதிமுகவில் எளிய தொண்டன், உயர் பதவி பதவிக்கு வர முடியும் என்பதற்கு நானே சான்றாக உள்ளேன். ஒரு கிளைச் செயலாளர் முதலமைச்சராக, கட்சியின் பொதுச் செயலாளராகவும் முடியும். இந்தியாவிலேயே வேறு எந்த கட்சியிலும் இல்லாத வகையில் அதிமுகவில் ஜனநாயகம் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. கட்சிக்கு உண்மையாக,
விசுவாசமாக உழைக்கின்ற அதிமுகவினருக்கு பதவி அவர்களை தேடி வரும். விரைவில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அப்போது நமது கட்சி வேட்பாளர்/கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறும்போது அவர் தான் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பார். தேசிய அளவிலான கட்சிகளோடு கூட்டணி வைத்தால், தேசிய அளவிலான பாதையில் சென்று விடுகிறது. அதனால் நமது மாநிலத்தின் பிரச்னைகள் காது கொடுத்து கேட்கப்படுவதில்லை. அதனால் நாம் பாதிக்கப்படுகிறோம். எனவே தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை கொண்டு வர தேவையான நிதியை பெற்று வர,
வெள்ளம் வறட்சி போன்ற காலங்களில் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளை துன்பங்களை யார் நிவர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு பிரச்சனை அடிப்படையில் ஆதரவு கொடுப்போம். தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளை எடுத்துச் சொன்னால் காது கொடுத்து கேட்பதில்லை. அதனால் தான், நமது உரிமையை பாதுகாக்க தனியாக பிரிந்து விட்டோம். தற்போது திமுக தேசிய அளவில் இந்தியா கூட்டணி அமைத்துக் கொண்டு,
எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற விடலாம் என திமுக செயல் படுகிறது. ஆனால் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் காரின் டயர் கழன்று செல்வது போல ஒவ்வொன்றாக பிரிந்து செல்கின்றார்கள். அந்த அளவிற்கு இராசியான கட்சி திமுக. கடந்த தேர்தலின் போது இராகுல் தான் பிரதமர் என்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட இராசியான முதல்வர் தான் ஸ்டாலின். அவர் I.N.D.I.A கூட்டணி குறித்து பேச பேச ஒவ்வொரு கட்சியாக பிரிந்து செல்கின்றனர்.
அதிமுகவை பொறுத்தவரை பொறுத்திருந்து பாருங்கள். சிறப்பான கூட்டணி அமையும். அண்மையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில், அதில் எவ்வளவு முதலீடு, எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்பு என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டிருந்த நிலையில், இதுவரை பதில் இல்லை.
20 நாட்களுக்கு முன்பு தான் சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திய நிலையில், முதல்வர் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிறுவனங்களை ஏன் சென்னையில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அழைக்கவில்லை? என்றும், சென்னை, திருச்சி, தூத்துக்குடி, பெருந்துறை உள்ள நிறுவனங்களுக்கு ஸ்பெயினில் சென்று முதல்வர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இங்குள்ள நிறுவனங்களுக்கு ஏன் ஸ்பெயின் சென்று புரிந்துணர் ஒப்பந்தம் போட வேண்டும்? முதல்வர் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை, முதல்வர் முதலீடு செய்யவே ஸ்பெயின் சென்றதாகவும், இதில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார். திமுக மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்.
வீட்டு மக்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணமாக உள்ளது. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மடிந்து விட்டது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நிகழ்ச்சியில் பேசினார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகிகள், குமாரபாளையம்,
திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
