ஒரு கட்சியின் பேராசைக்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது: மு.க.ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய பா.ஜ அரசு விரும்பியது. இதற்காக கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் வழங்கியது. இந்நிலையில் இந்த ஆய்வு குழுவின் அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. ஆனால் இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சாத்தியமற்றது என மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு குந்தகம் விளைவிக்கும். இந்தியாவின் பன்முகத் தன்மை, சிக்கலான தேர்தல் முறையை கருத்தில் கொள்ளாத ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது.திசைதிருப்பும் வேலைகளில் ஒன்றிய அரசு தனது சக்தியை வீணடிக்க வேண்டாம். தேர்தல் நடைமுறையில் உள்ள வேறுபாடு, வட்டார பிரச்சனையில் நிர்வாக முன்னுரிமைகளை கருத்தில் கொள்ளவில்லை. பாஜகவின் வறட்டு கவுரவத்துக்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது. வேலையின்மை, விலைவாசி உயர்வு, நியாயமான மாநில நிதிப் பகிர்வு பிரச்சனைகளில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். எந்த காலத்திலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.