மாமன்னன் இராச ராசசோழன் 1038வது ஆண்டு சதய விழா தொடக்கம்

தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் மாமன்னன் இராசராச சோழன் 1038 ஆம் ஆண்டு சதய விழா இன்று துவங்கியது.

தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் மாமன்னன் இராசராச சோழன் 1038 ஆம் ஆண்டு சதய விழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை துவங்கியது. சதய விழா குழுத் தலைவர் து.செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், பரம்பரை அறங்காவலர் (அரண்மனை தேவஸ்தானம்) பாபாஜி ராஜா பான்ஸ்லே, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சூரியனார் கோவில் ஆதீனம் திரு.மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளுறையாற்றினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை வகித்து பேசியதாவது. 985ஆம் ஆண்டு முதல் 1014 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்து சோழப் பேரரசின் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னன் இராசராச சோழன். ஞானகேசரி என்ற பட்டத்தை பெற்றவர் மாமன்னன் ராஜராஜ சோழன். மன்னர் ஆட்சியே மக்கள் ஆட்சி என்று நடைமுறைப்படுத்தியவர். சோழப் பேரரசு நிர்வாகத்தில் பல்வேறு புதுமைகளை தோற்றுவித்ததின் சிறப்பு மாமன்னன் இராசராச சோழனுக்கு உண்டு. சிவப்பாத சேகரன், திருமுறை கண்ட சோழன் என்ற பல பெயர்களை கொண்டு அழியாத புகழை கொண்டுள்ளார். இத்திருக்கோயில் ஆன்மீகத்திற்கு மட்டுமல்லாமல் நமது கலை, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

மாமன்னனின் மகத்தான சாதனைகளால் காலம் கடந்தும் நாம் போற்றி கொண்டாடி விழா நடத்தி சிறப்பித்து வருகிறோம். இவ்வாண்டு மாமன்னனின் 1038வது சதய விழா அரசு விழாவாக , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாமன்னன் இராசராச சோழனின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கட்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பேசினார்.

Tags

Next Story