இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி: தஞ்சாவூர் மாணவி தேர்வு

இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு தஞ்சாவூர் மாணவி தேர்வாகி உள்ளார்.

வருகிற செப்டம்பர் மாதம் இத்தாலியில் நடைபெறவுள்ள இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி உலக சாம்பியன்ஷீப் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட தஞ்சாவூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாதாக்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் தமிழக ஹாக்கி வீரர் பாஸ்கரன். தாய் ராணி ஆசிரியையாக உள்ளார். இவர்களது இரண்டாவது மகள் பூர்ணிஷா(19). இவர் தற்போது, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். பூர்ணிஷா இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட்டு வீராங்கனையாக கடந்த 14 ஆண்டுகளாக பயிற்சி பெற்று, மாநில, தேசிய அளவிலும், ஆசிய அளவிலும் விளையாடி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி உலகசாம்பியன்ஷீப் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட இந்திய அணி சார்பில் சீனியர் பெண்கள் பிரிவில் பஞ்சாப் அணி மூலம் தேர்வாகியுள்ளார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து பூர்ணிஷா கூறியதாவது: "நான் கடந்த 14 ஆண்டுகளாக இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் விளையாடி வருகிறேன். மாவட்ட, மாநில, தேசிய, ஆசிய அளவில் விளையாடி பல பதக்கங்களை பெற்றுள்ளேன். தமிழகம் சார்பில் இந்த விளையாட்டுக்கான அணி இல்லாத காரணத்தால், நான் பஞ்சாப் மாநில அணியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறேன். வருகிற செப்டம்பர் மாதம் இத்தாலியில் உலக சாம்பியன்ஷீப் போட்டி நடைபெறுகிறது. இதில் விளையாட தேர்வாகியுள்ளேன்.

இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 15 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி உள்ளது. அதில் பங்கேற்க தயாராகி கொண்டிருக்கிறேன். அந்த பயிற்சி ஜூன் 10 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2021 -இல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷீப் போட்டியின்போது கடைசி நேரத்தில் பங்கேற்க முடியாமல் போனது, இந்த முறை தேர்வாகி இந்தியாவுக்காக வெற்றி வாகை சூடி வருவேன்" என்றார்.

Tags

Next Story