பேராவூரணியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பேராவூரணியில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தேர்தல் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வேட்பாளர் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்துவதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் தயார் நிலையில் உள்ளதை ஆய்வு மேற்கொண்டார். மேலும் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கும் பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தியும், பேராவூரணி தொகுதிக்குட்பட்ட 16 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் தகுந்த முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்து, பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷணக் குமார் மற்றும் பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானையிடம் கேட்டறிந்தார். பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 2 பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்தலில் வாக்களிக்க வரும் பொதுமக்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது தேர்தல் துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story